Friday, July 30, 2010

என் சிறைவாழ்க்கை..




உண்மையில்
அந்த இரவு
என் வாழ்க்கையின்
கருப்பு தினமாகவே
இருக்கும்..

ஆம்..ஆருயிர் நண்பன்
கொலையுண்டதும்..
அதன் சந்தேகக்
கிரணங்கள்
என் மேல்விழுந்ததும்
அதிர்ச்சி மேல்
அதிர்ச்சியாய்
நடந்தேறியது
நாடக மேடைச் - சித்திரம்
போல..


விசாரணை
வழக்குகளென
ஓடின தினங்கள்
ரணங்களாக..

உண்மை
சொந்தக் குரலில்
கதறும் போது
பொய்
சாட்சிகளின் வாயில்
சத்தியம் பேசியது..

காரணம் புரியவில்லை
என்னை சொந்தங்கள்
அணுகவில்லை..

ஏனென்று தெரியவில்லை
என்னை நண்பர்களும்
நெருங்க வில்லை..

நினைத்துப் பார்த்தேன்..
உண்மையில்
அந்த இரவு
என் வாழ்க்கையின்
கருப்பு தினமாகவே
இருக்கும்..

நம் திருநாட்டில்
வசதி படைத்தவர்களுக்குத் தானே..
வழக்குகளும்
வாய்தாக்களும்..
என் போன்ற
சாமானியர்களுக்கு
தீர்ப்புகளும் தண்டனைகளும்
மட்டும் தானே..

ஆம்..
தீர்ப்பு எழுதப் பட்டது
என் வழக்கின் மேல்..
இல்லை
தீர்ப்-பூத் தூவப்பட்டது
நீதியின்
சமாதி மேல்..

இந்திய தண்டனைச்
சட்டப்படி -
எவனோ இழைத்த
குற்றத்திற்கு
எனக்கு
ஏழாண்டு கடுங்காவல்..

வழிந்தது கண்ணீர்..
இருண்டது உலகம்..
தொலைந்தது வாழ்க்கை..

இடிந்தது
முன்னிரவுகளில்
மனைவியோடு
கற்பனையில் கட்டிய
கனவுக் கோட்டைகள்..

திறந்தது
பார்த்ததும் பயந்தரும்
முன்னறியாத
சிறையின் கதவுகள்..

சீருடைத் தரப்பட்ட
கையோடு - அங்கே
மானுடம் கொல்லப் பட்டது..
விலங்கைப் போல்
நான் உள்ளே
தள்ளப்பட்ட போது..

கடந்த காலம்
நினைத்துக் கலங்கினேன்..

மிடுக்கான உடை..
துடுக்கான நடை..
அடுக்கான ஆங்கிலம்..
இப்போது
ஒரு இடுக்குதான்
எனக்கு இருப்பிடம்..

வேகாத சோறு..
தவளைக் குஞ்சுகள்
மிதக்கும் தண்ணீர்..
கதவேயில்லா -
அறுவறுப்பான -
ஆயுள் முழுதும்
கழுவியே காணாத
கழிவறை..
நூறு பேருக்குப்
பொதுவாய்
ஒரு குளிப்படம்..

இம்மியளவும்
காற்றோ
ஒளியோ வராத
ஆயிரம் கொசுக்களின்
வசிப்பிடமே -
இங்கு எல்லோருக்கும்
புகலிடம்..

அப்பப்பா..
சிறையின் இரவுகள்
நரகம்..
சிறையின் பகல்கள்
பாழும் நரகம்..

தற்கொலையே
சாலச்சிறந்தது
இங்கே
தப்பிப் பிழைப்பதற்கு..

கொடுமையில் கொடுமையாய்
பிழைத்துப் பிழைத்துச்
செத்தேன்..
ஆம்..
இங்கே பிழைத்தல்
சாவினும் கொடுமை..

எப்படியோ..
துயரத்தில் துயரமாய்
இந்த துர்வாழ்வின்
மூன்றாண்டுகள்
முடிந்திருந்த போதுதான்
முதுகில்
தட்டியெழுப்பினாள்
என் மனைவி..

போதும் தூங்கியது
மணி ஆறாகியதென்று..

அய்யகோ..
குற்றமே புரியாமல்
மூன்றாண்டு சிறைவாழ்வை
கனவிலேயே
வாழ்ந்த
அந்த இரவு
என் வாழ்க்கையின்
கருப்பு தினமாகவே
இருக்கும்..

- அரவிந்த் குமார்.பா











No comments:

Post a Comment