Monday, August 2, 2010

செவத்தவளே..




செவத்தவளே
என் செவத்தவளே
என்ன சிரிச்சே
செயிச்சவளே..

என் கண்ணுல
மெதுவா தடுக்குனதால
நெஞ்சுல
விழுந்தவளே..

நீ
ஓரமாப் பாத்ததெல்லாம்
காரமாப் பாத்ததெல்லாம்
வேகமா புத்தியில் போயி
மத்தியில் நின்னு
பொதஞ்சதடி..

ஓன் ஈர உதட்டில்
குடிவர
ஏன் பேருக் கென்னைக்கு
யோகமோ..

அந்த நாளத் தேடி
நூலாப் போறேன்..

செவத்தவளே - என்
செவத்தவளே

காட்டு வெள்ளம் - அது
ஓடி வந்தா
எந்தப் பாதையும்
பாப்பது இல்ல..

ஏன் பாட்டு வெள்ளம் - அது
அது ஓடிவர
ஓன் பார்வையத்
தேடுது புள்ள..

செவத்தவளே - என்
செவத்தவளே

ஒரச்ச மழ
பேயையில
வெரச்ச மண்ணு
கரைவதப் போல

நீ சிரிச்சுக்கிட்டே
பாத்ததுல
உசுர் அரிச்சுக்கிட்டு
போயிருச்சே..

மொளச்ச வெத
பூமிக்குள்ள
தொளச்சுக்கிட்டு
வாரதப் போல

வெடிச்சுருச்சு
ஓன்னெனப்பு
மூளையோட
முடிச்சுக்குள்ள..

போகாதுன்னு
நெனச்ச
ஏம்மனச
நீ கைப்பிடிச்சு
கூட்டிப் போயிட்ட..

வேணாமுன்னு
கெடந்த
உயிர்க் கொழுந்த
நீ மய்ய வச்சு
மயக்கிப்புட்ட..

தீராமக் கெடந்த
ஏந்திமிரில
நீ
தீய வச்சுப்புட்ட..

காப்பாத்துன்னு
நான்
கதற
நீ
கைய்ய விரிச்சுப்புட்ட..

- அரவிந்த் குமார்.பா


காதல் சொல்ல வந்தாள்

நீதானா
என் பெயர் சொல்லி
அழைத்தவள்.
என் உயிர்க்குள்ளே
நிலைத்தவள்.

நலம்தானா
என் சுகம் சரிக்கும்
உன் கண்கள்
என் அகம் பெயர்த்த
உன் இதழ்கள்.

இப்போதுதானா
கிடைத்தது
நேரம்..
இன்றுதானா
விடை பெற்ற துன்
நாணம்..

படபடவெனப்
பேசும் மொழி
எங்கே..

தடதடவென
ஓடும் கால்கள்
எங்கே..

முதன்முதல் வந்த
காதலதைச் சொல்ல
அத்தனையும் இன்று
அடமானம் வைத்தாயோ..

மெதுமெதுவாய்
காதல் சொன்ன பிறகு..
துறுதுறுவெனத்
துளிர்க்குமோ சிறகு..

சரசரவென
இழந்தவை யத்தனையும்
அப்புறமாய் வட்டியுடன்
மீட்பாயோ..

தனியே வந்தபின்
ஏனடி
தள்ளி நிற்கிறாய்..

கவிதை நேரமிது
பிறகேன்
கண்ணீர் வடிக்கிறாய்..

கவலை
பேச வேண்டாம்..
வா..
நிறையக் காதலைப்
பேசுவோம்..

காத்திருக்கிறது
வெளியே
இயற்கை -
வா.. அதனிடம்
வாழ்த்துக்கள் வாங்குவோம்..

- அரவிந்த் குமார்.பா

பச்சைப் பசுங்குயில்

பச்சைப் பசுங்குயில்
இச்சைக் கருங்குயில்
இப்போது இல்லை என் பக்கம்..

எங்கள் சிறகுகள்
உரசிய சிருங்கார மேகங்கள்
என்னை கேலி செய்து
சிரிக்குது நித்தம்..

கரையில் நடந்தேன்
அலையோடு
ஆறுதல் கிடைக்க..

மழையில் நனைந்தேன்
அழும் போது
கண்ணீரை மறைக்க..

கலைந்து போனது
கனவெல்லாம்..
சிலுவை யானது
நினைவெ ல்லாம்..
மறந்து போக
முயற்சி செய்தேன்
மறதியின் குருதியைக்
குடித்து விட்டாள்..

ஒரு நொடியில்
காதல் கலைந்து போனதும்
என் செடியின்
இலைகள் காய்ந்து போனது..
இன்னொரு மழையில்
துளிர்க்க நினைத்தேன்
சருகாய் இருந்தும்
உதிர மறுக்கிறாள்..

- அரவிந்த் குமார்.பா

கனல் நிலவே




கனல் நிலவே - என்
கனவுக்குள் புகுந்து
கலவரமூ ட்டுகிறாய்..

மெதுமெதுவாய் - என்
நினைவுக்குள் புகுந்து
நிலவரம் மாற்றுகிறாய் ..

ஆவியானது
என் உயிர் மொத்தம்..
உன் ஜோதி விழியில்
எத்தனை வெப்பம்..

உன் பாதிப்புன்னகை
கண்டது பிழையா..
இந்தப் பாதிப்புகள்தான்
காதலின் விலையா..

வேண்டுமென்றே
கண் முன்னால் - நீ
நடந்து போகின்றாய்..

உன் விழியின் குழியில்
விழுவேனா வென்று
விரதமி ருக்கின்றாய்..

மறந்தும் கூட
மௌனச் சுவரை
உடைக்க மறுக்கின்றாய்..

உன் பருந்துப்
பார்வைக் கெலி போலென்னை
உணர வைக்கின்றாய்..

அருவியில்
குதிக்கச் சொன்னால்
அடுத்த நொடியில்
குதிப்பேன்..

உன் அருகில்
போய் வரச் சொன்னால்
அய்யோ முடியாமல்
துடிப்பேன்..

உலகம் முழுதும்
எனதென் றாலும்
இல்லையெ னக்கு
மகிழ்ச்சி..

என் கவனம்
குலையாமல்
உன் கண்களைப்
பார்த்தால் - அதுவே
பெரிய புரட்சி..

விழாமல்
உன் விழி
எதிர் கொள்ளப்
பழகிக் கொள்கிறேன்..

உன் கலாப மொழி
அத்தனையும்
கற்றுக் கொள்கிறேன்..

பலாச் சுளை
கன்னங்களை
நினைத்துக் கொள்கிறேன்..

இந்த நிலாப் பெண்ணை
மனைவியாக்க
முயற்சி செய்கிறேன்..

- அரவிந்த் குமார்.பா