Monday, August 2, 2010

செவத்தவளே..
செவத்தவளே
என் செவத்தவளே
என்ன சிரிச்சே
செயிச்சவளே..

என் கண்ணுல
மெதுவா தடுக்குனதால
நெஞ்சுல
விழுந்தவளே..

நீ
ஓரமாப் பாத்ததெல்லாம்
காரமாப் பாத்ததெல்லாம்
வேகமா புத்தியில் போயி
மத்தியில் நின்னு
பொதஞ்சதடி..

ஓன் ஈர உதட்டில்
குடிவர
ஏன் பேருக் கென்னைக்கு
யோகமோ..

அந்த நாளத் தேடி
நூலாப் போறேன்..

செவத்தவளே - என்
செவத்தவளே

காட்டு வெள்ளம் - அது
ஓடி வந்தா
எந்தப் பாதையும்
பாப்பது இல்ல..

ஏன் பாட்டு வெள்ளம் - அது
அது ஓடிவர
ஓன் பார்வையத்
தேடுது புள்ள..

செவத்தவளே - என்
செவத்தவளே

ஒரச்ச மழ
பேயையில
வெரச்ச மண்ணு
கரைவதப் போல

நீ சிரிச்சுக்கிட்டே
பாத்ததுல
உசுர் அரிச்சுக்கிட்டு
போயிருச்சே..

மொளச்ச வெத
பூமிக்குள்ள
தொளச்சுக்கிட்டு
வாரதப் போல

வெடிச்சுருச்சு
ஓன்னெனப்பு
மூளையோட
முடிச்சுக்குள்ள..

போகாதுன்னு
நெனச்ச
ஏம்மனச
நீ கைப்பிடிச்சு
கூட்டிப் போயிட்ட..

வேணாமுன்னு
கெடந்த
உயிர்க் கொழுந்த
நீ மய்ய வச்சு
மயக்கிப்புட்ட..

தீராமக் கெடந்த
ஏந்திமிரில
நீ
தீய வச்சுப்புட்ட..

காப்பாத்துன்னு
நான்
கதற
நீ
கைய்ய விரிச்சுப்புட்ட..

- அரவிந்த் குமார்.பா


காதல் சொல்ல வந்தாள்

நீதானா
என் பெயர் சொல்லி
அழைத்தவள்.
என் உயிர்க்குள்ளே
நிலைத்தவள்.

நலம்தானா
என் சுகம் சரிக்கும்
உன் கண்கள்
என் அகம் பெயர்த்த
உன் இதழ்கள்.

இப்போதுதானா
கிடைத்தது
நேரம்..
இன்றுதானா
விடை பெற்ற துன்
நாணம்..

படபடவெனப்
பேசும் மொழி
எங்கே..

தடதடவென
ஓடும் கால்கள்
எங்கே..

முதன்முதல் வந்த
காதலதைச் சொல்ல
அத்தனையும் இன்று
அடமானம் வைத்தாயோ..

மெதுமெதுவாய்
காதல் சொன்ன பிறகு..
துறுதுறுவெனத்
துளிர்க்குமோ சிறகு..

சரசரவென
இழந்தவை யத்தனையும்
அப்புறமாய் வட்டியுடன்
மீட்பாயோ..

தனியே வந்தபின்
ஏனடி
தள்ளி நிற்கிறாய்..

கவிதை நேரமிது
பிறகேன்
கண்ணீர் வடிக்கிறாய்..

கவலை
பேச வேண்டாம்..
வா..
நிறையக் காதலைப்
பேசுவோம்..

காத்திருக்கிறது
வெளியே
இயற்கை -
வா.. அதனிடம்
வாழ்த்துக்கள் வாங்குவோம்..

- அரவிந்த் குமார்.பா

பச்சைப் பசுங்குயில்

பச்சைப் பசுங்குயில்
இச்சைக் கருங்குயில்
இப்போது இல்லை என் பக்கம்..

எங்கள் சிறகுகள்
உரசிய சிருங்கார மேகங்கள்
என்னை கேலி செய்து
சிரிக்குது நித்தம்..

கரையில் நடந்தேன்
அலையோடு
ஆறுதல் கிடைக்க..

மழையில் நனைந்தேன்
அழும் போது
கண்ணீரை மறைக்க..

கலைந்து போனது
கனவெல்லாம்..
சிலுவை யானது
நினைவெ ல்லாம்..
மறந்து போக
முயற்சி செய்தேன்
மறதியின் குருதியைக்
குடித்து விட்டாள்..

ஒரு நொடியில்
காதல் கலைந்து போனதும்
என் செடியின்
இலைகள் காய்ந்து போனது..
இன்னொரு மழையில்
துளிர்க்க நினைத்தேன்
சருகாய் இருந்தும்
உதிர மறுக்கிறாள்..

- அரவிந்த் குமார்.பா

கனல் நிலவே
கனல் நிலவே - என்
கனவுக்குள் புகுந்து
கலவரமூ ட்டுகிறாய்..

மெதுமெதுவாய் - என்
நினைவுக்குள் புகுந்து
நிலவரம் மாற்றுகிறாய் ..

ஆவியானது
என் உயிர் மொத்தம்..
உன் ஜோதி விழியில்
எத்தனை வெப்பம்..

உன் பாதிப்புன்னகை
கண்டது பிழையா..
இந்தப் பாதிப்புகள்தான்
காதலின் விலையா..

வேண்டுமென்றே
கண் முன்னால் - நீ
நடந்து போகின்றாய்..

உன் விழியின் குழியில்
விழுவேனா வென்று
விரதமி ருக்கின்றாய்..

மறந்தும் கூட
மௌனச் சுவரை
உடைக்க மறுக்கின்றாய்..

உன் பருந்துப்
பார்வைக் கெலி போலென்னை
உணர வைக்கின்றாய்..

அருவியில்
குதிக்கச் சொன்னால்
அடுத்த நொடியில்
குதிப்பேன்..

உன் அருகில்
போய் வரச் சொன்னால்
அய்யோ முடியாமல்
துடிப்பேன்..

உலகம் முழுதும்
எனதென் றாலும்
இல்லையெ னக்கு
மகிழ்ச்சி..

என் கவனம்
குலையாமல்
உன் கண்களைப்
பார்த்தால் - அதுவே
பெரிய புரட்சி..

விழாமல்
உன் விழி
எதிர் கொள்ளப்
பழகிக் கொள்கிறேன்..

உன் கலாப மொழி
அத்தனையும்
கற்றுக் கொள்கிறேன்..

பலாச் சுளை
கன்னங்களை
நினைத்துக் கொள்கிறேன்..

இந்த நிலாப் பெண்ணை
மனைவியாக்க
முயற்சி செய்கிறேன்..

- அரவிந்த் குமார்.பா


Friday, July 30, 2010

என் சிறைவாழ்க்கை..
உண்மையில்
அந்த இரவு
என் வாழ்க்கையின்
கருப்பு தினமாகவே
இருக்கும்..

ஆம்..ஆருயிர் நண்பன்
கொலையுண்டதும்..
அதன் சந்தேகக்
கிரணங்கள்
என் மேல்விழுந்ததும்
அதிர்ச்சி மேல்
அதிர்ச்சியாய்
நடந்தேறியது
நாடக மேடைச் - சித்திரம்
போல..


விசாரணை
வழக்குகளென
ஓடின தினங்கள்
ரணங்களாக..

உண்மை
சொந்தக் குரலில்
கதறும் போது
பொய்
சாட்சிகளின் வாயில்
சத்தியம் பேசியது..

காரணம் புரியவில்லை
என்னை சொந்தங்கள்
அணுகவில்லை..

ஏனென்று தெரியவில்லை
என்னை நண்பர்களும்
நெருங்க வில்லை..

நினைத்துப் பார்த்தேன்..
உண்மையில்
அந்த இரவு
என் வாழ்க்கையின்
கருப்பு தினமாகவே
இருக்கும்..

நம் திருநாட்டில்
வசதி படைத்தவர்களுக்குத் தானே..
வழக்குகளும்
வாய்தாக்களும்..
என் போன்ற
சாமானியர்களுக்கு
தீர்ப்புகளும் தண்டனைகளும்
மட்டும் தானே..

ஆம்..
தீர்ப்பு எழுதப் பட்டது
என் வழக்கின் மேல்..
இல்லை
தீர்ப்-பூத் தூவப்பட்டது
நீதியின்
சமாதி மேல்..

இந்திய தண்டனைச்
சட்டப்படி -
எவனோ இழைத்த
குற்றத்திற்கு
எனக்கு
ஏழாண்டு கடுங்காவல்..

வழிந்தது கண்ணீர்..
இருண்டது உலகம்..
தொலைந்தது வாழ்க்கை..

இடிந்தது
முன்னிரவுகளில்
மனைவியோடு
கற்பனையில் கட்டிய
கனவுக் கோட்டைகள்..

திறந்தது
பார்த்ததும் பயந்தரும்
முன்னறியாத
சிறையின் கதவுகள்..

சீருடைத் தரப்பட்ட
கையோடு - அங்கே
மானுடம் கொல்லப் பட்டது..
விலங்கைப் போல்
நான் உள்ளே
தள்ளப்பட்ட போது..

கடந்த காலம்
நினைத்துக் கலங்கினேன்..

மிடுக்கான உடை..
துடுக்கான நடை..
அடுக்கான ஆங்கிலம்..
இப்போது
ஒரு இடுக்குதான்
எனக்கு இருப்பிடம்..

வேகாத சோறு..
தவளைக் குஞ்சுகள்
மிதக்கும் தண்ணீர்..
கதவேயில்லா -
அறுவறுப்பான -
ஆயுள் முழுதும்
கழுவியே காணாத
கழிவறை..
நூறு பேருக்குப்
பொதுவாய்
ஒரு குளிப்படம்..

இம்மியளவும்
காற்றோ
ஒளியோ வராத
ஆயிரம் கொசுக்களின்
வசிப்பிடமே -
இங்கு எல்லோருக்கும்
புகலிடம்..

அப்பப்பா..
சிறையின் இரவுகள்
நரகம்..
சிறையின் பகல்கள்
பாழும் நரகம்..

தற்கொலையே
சாலச்சிறந்தது
இங்கே
தப்பிப் பிழைப்பதற்கு..

கொடுமையில் கொடுமையாய்
பிழைத்துப் பிழைத்துச்
செத்தேன்..
ஆம்..
இங்கே பிழைத்தல்
சாவினும் கொடுமை..

எப்படியோ..
துயரத்தில் துயரமாய்
இந்த துர்வாழ்வின்
மூன்றாண்டுகள்
முடிந்திருந்த போதுதான்
முதுகில்
தட்டியெழுப்பினாள்
என் மனைவி..

போதும் தூங்கியது
மணி ஆறாகியதென்று..

அய்யகோ..
குற்றமே புரியாமல்
மூன்றாண்டு சிறைவாழ்வை
கனவிலேயே
வாழ்ந்த
அந்த இரவு
என் வாழ்க்கையின்
கருப்பு தினமாகவே
இருக்கும்..

- அரவிந்த் குமார்.பாThursday, July 29, 2010

பரிச்சயமில்லாத இரயில் தோழி..
அது சுகமான
இரயில் பயணம்..
என் தோளோடு
உன் சயனம்..

மறுபடி ஒருமுறை
கேட்டாலும்
நிகழாத
ஒரு தருணம்..

உன் கூந்தல்
முடிகள்
ஒன்றிரண்டு
என் மீசையொடு
கை கோர்த்தனவே..

உன் சுரிதார்
சிறகுகள்
நீண்டு வந்து
என் தோள்
தொட்ட ணைத்தனவே..

உன் காற்கொலுசுகள்
சொன்ன
இரகசியங்களை
கைவளை வந்து
காதருகே சொன்னதே..

உன் பாற்கடல்
நெற்றியில்
என்-னைவிரலும்
படகாக
ஆசை கொண்டதே..

பார்த்தேன்
நம் பாதணிகள்
ஓரமாய்
இணையானதை..

உற்றேன்
நம் கைப்பைகள்
உற்சாகமாய்
ஊஞ்சலாடி யதை..

உன்னைத் தொட்டு
வந்த போது
தென்றல் - சுகமாய்த்
தெரிந்ததை..

உன் சவாசம் - என்னைச்
சுட்ட போது
காற்றில் தீப்பற்றிக்
கொண்டதை..

எனக்காகவே
பெண்ணாகியவளா நீ..

என்னைக் - காணவே
இரயிலே றியவளா நீ..

எண்ணிக் கொண்டே
உன்னில் இலயித்தேன்..
என்னை மறந்து
தூங்கித் தொலைத்தேன்..

இரயில் நின்று
செல்வதாய் -
உள்ளுணர்ந்ததால்
இரகசியமாய்
விழித்தேன்..

அய்யோ..
நீ அருகில் லாததால்
உன்னைத் தொலைத்தே- னென்று
துடித்தேன்..

அவசரமாய்
வாசல் நின்று
சந்திப்பெல்லாம்
சளித்தேன்..
உன்னைக்
காணோமென்று
சலித்தேன்..

அதோ
அதிகாலை -
அருகாமை -
நடைமேடை -
வெண்ணாடை -
பறக்கும் கூந்தல் -
நடக்கும் ஏஞ்சல் -
போவது..
நீதானென்று
கணித்தேன்..

நீ
திரும்பிச்
சிரித்தாய் - நான்
சாகாமல்
பிழைத்தேன்...

- அரவிந்த் குமார்.பாஎனை நானே கண்டேன் இன்று..
எனை நானே
கண்டேன் இன்று
தூளியிலே
மழலையாக..

அடடா
என் சந்தோசங்கள்
கண்ணோரம்
துளிகளாக..

இறைவா..
என் வாழ்வில்
இந்நேரம் - இணையில்லா
தருணம்
எந்நாளும்..

உலகத்தின் வசந்தங்கள்
எல்லாமும் - இவன்
உருவத்தில் வந்ததது
போலாகும்..

ஆயுள் முழுவதும்
தவம் செய்தாலும்
கிடைக்கா
வரமே..

என் ஆவலை
ஆயிரம் மடங்கு
நிறைத்தாய் - என்றாலும்
தகுமே..

உன் பேரழகை
உலக மொழிகளில்
உரைக்கத்தான்
முடியுமா..

இந்தப் பேருலகில்
அழகென்ற
மற்றவையெல்லாம்
ச்சும்மா..

என் வாழ்க்கை
கரிசற்காடு..
நீ வந்தாய்
மழைமுகிலோடு..
இனி
புல்லினங்கள்
செய்யுள்கள் பாடும்
புதிதாய்ப் பூக்கும்
பூக்களோடு..

- அரவிந்த் குமார்.பா