Tuesday, July 27, 2010

நீ பிரிந்து போனதும்..




நீ
பிரிந்து போனதும்
எனக்கு
கவிதையெ ழுதுவதே
மறந்து போனது..

உன்
சிநேகம் தவிர்த்ததும்
என் தேசத்தில்
மேகம் பொழிவதை
நிறுத்திக் கொண்டது..

நம் பிரிதலை
நீ முன்மொழிகையில்
என் தோட்டத்து
மலர்களெல்லாம்
தற்கொலை
செய்து கொண்டன..

என்
வீடு தேடிவந்து
வண்ணத்துப் பூச்சியொன்று
வருத்தம் தெரிவித்துப்
போனது..

எங்கள்
பாச நாய்க்குட்டி
இந்த
இருதயக் கொலை குறித்து
விசாரணையில் இறங்கவாயென
வினாவியது..

சுடிதார்ப் பெண்களெல்லாம்
இப்போது எனக்கு
உன் வேடம்
தரித்தாற்போல்
தெரிகிறது..
அல்லது
உன் போல
வேடம் தரித்ததாய்த்
தெரிகிறது..

இருந்தாலும்
என் சிந்தனைகள்
உள்வாங்கும்
எல்லா அலைவரிசையிலும்
உன் ஞாபகமே
ஒளிபரப்பாகிறது
இரவும்.. பகலும்..


என்
இருதயக் கோவிலின்
கருவறை
இருட்டடைந்தே கிடக்கிறது..
அதைப் புனரமைக்க
யாரும் வரவில்லை
இன்னமும்..

- அரவிந்த் குமார்.பா

No comments:

Post a Comment