Wednesday, July 28, 2010

எனக்கு மட்டும் சொல்லிவிடு..




உனதோ எனதோ
எங்கேயடி தொலைந்தது
நமதான காதல்..

என் காதல் மட்டும்
சீனப் பெருஞ்சுவராய்
இன்னமும்..
உனது மட்டும்
எப்படியானது
பெர்லின் சுவராய்..

'உன்னை மறந்தால்
மரணம்தான் எனக்கு ' - என்று
கண் கலங்கிச் சொன்னாயே
ஒரு நாள்..

ஓ..
உதடுகளால்
எழுதியதை
கண்ணீரால்
அழித்துவிட்டாயோ..

உயிரைத்
தொட்டுத் திரும்பும்
சுவாசமெல்லாம்
உன்னையே
நினைத்துக் கொண்டிருக்கிறது
எந்நேரமும்..

என்ன
செய்து கொண்டிருக்கிறாய் நீ
இந்நேரம்..

'உன் கண்கள் பிடிக்கும் -
உன் புன்னகை பிடிக்கும் -
உன் ஆணவம் பிடிக்கும் -
உன் ஆளுமை பிடிக்கும் '
என்பாயே..

எப்படியடி
மறந்தாய்
ஒட்டு மொத்தமாய்
உன்னை மட்டுமே
பிடித்த என்னை..

என் மலர்ந்த
இதயத்தில்
எப்போதும் இருப்பவளே..

நான் கொடுத்த
பூக்களை
வாடிய பின்பும்
பத்திரப்படுத்தி
வைத்திருந்தாயே ..

இப்போது
என்ன செய்தாய்
அவற்றை..

கிடக்கட்டும்
என்று வைத்திருக்கிறாயே..
அல்லது
குப்பைக் கூடைக்கு
அனுப்பி விட்டாயா..

நீ வரும்
கனவில் இருந்து
உன் கையெழுத்து
சிரிக்கும் காகிதம் - வரை
எல்லாவற்றையும்
நினைவகத்தின்
முதலடுக்கிலேயே
செதுக்கி வைத்திருக்கிறேன்..
நான் - நம்
முதல் முத்தத்தைப்
போல..

நம்
முதல் முத்தமேனும்
ஞாபகமிருக்கிறதா
உனக்கு..

உன் பிறந்த நாளன்று
நான் பரிசளித்த
வண்ணத் துப்பட்டாவும்
பட்டாம் பூச்சிக்
கவிதையும்
போதுமே..
மறக்க மறக்க
பறைசாற்றும்
என் காதலை..

எங்கே
ஊமையாக்கி விட்டாயா
அந்த
உன்னத சின்னங்களை..

எல்லாம் சரி
கடவுளே வந்தாலும்
என் காதலை
அழிக்க முடியாது
என்றாயே..

எனக்கு மட்டும்
சொல்லிவிடு..
கடைசியாய்
உன் காதலை
வந்து அழித்தது
எந்தக் கடவுள்
என்று..

- அரவிந்த் குமார்.பா

No comments:

Post a Comment