Sunday, July 25, 2010

நீ பார்த்ததில்தானடி

நீ பார்த்ததில்தானடி
பைத்தியமானேன்..
உனைப் பார்த்திடத்தானடி
பத்தியமிருந்தேன்..

சிரித்தாயடி
நான் சிக்கிக் கொள்ளவே..
தவித்தேனடி
நான் தப்பிச் செல்லவே..

காதல் வானில் களித்தேன்..
உன் கண்ணில் என்னைத் தொலைத்தேன்..

அங்கேயும் இங்கேயும்
அரைப் பார்வை பார்த்தென்னை
முழுப் பார்வைக் - கிரையாக்கினாய்..

அலுங்காமல் குலுங்காமல்
அதிர்வொன்றும் நிகழாமல்
இதயத்தை இடமாற்றினாய்..

வாளைக்
கையோடு கொண்டே - நீ
போரிட்டால்
வீழ்த்திச் செல்வேனடி..

வளையல் கரத்தோடு
வந்தே - நீ
போரிட்டாய்
வீழ்ந்தே நின்றேனடி..

வெளியே வெளியே
என் உள்ளம் சொல்ல..
வழியேயின்றி
என் வாழ்க்கை செல்ல..
முடிவாய்ச் சொல் பெண்ணே
நான் என் செய்ய..

அதிகாலை வந்தாய் - நீ
அதனாலே கனவுக்கு
பரிவட்டம் தந்தேனடி..

நெடு நாளாய்
உறக்கத்தில் உழன்ற
என் கவிதைக்கு
ஒளிவட்டம் தந்தாயடி..

உன்னைப் பார்க்காத
வரைக்கும் - என்
முகத்திற்கு
சிரிப்பே தெரியாதடி..

உன் கண்கள்
பார்க்காத வரைக்கும் - என்
படைப்பிற்கு
பரிசே கிடையாதடி..

அழகின் அர்த்தம் - உன்
கண்கள் என்பேன்..
கொலையில் புத்தம் - உன்
கொள்கை என்பேன்..
சிறகோடு சிலுவையில்
அறைந்தால் - அதுதான்
காதல் என்பேன்..

- அரவிந்த் குமார். பா

No comments:

Post a Comment