Wednesday, July 28, 2010

உந்தன் காதல் கொள்வதற்கா..



உந்தன் காதல்
கொள்வதற்கா - நான்
காலம் இத்தனை
காத்திருந்தேன்..

உன்னிடத்தில்
தொலைப்பதற்க்கா
என்னிதயம் - குலையாமல்
கட்டி வைத்தேன்..

உன் சிரிப்போடு
கொஞ்சம்
சுடர் - விழியோடு
கொஞ்சம்
தனித் - தமிழோடு
கொஞ்சம்
தனை இழந்தது
நெஞ்சம்..

உன் வாசலைக் கடந்து
நடக்கிற போது
கால்களுக்குப் பதில்
சிறகுணர்ந்தேன்..

என் கோசலை யுன் முகம்
காணா நாளை
என் வாழ்க்கைப் பதிவில்
விலக்கி வைத்தேன்..

கதிரொளியே
காணாத
நிலமது போலிருக்கும்..

முழுமதியாம்
உனது முகம்
காணாத
நாள் முழுமைக்கும்..

இரத்தினமாம்
என் காதல்
சத்தியமாய்
ஜெயித்திருக்கும்..

நித்திலமுன்
கன்னத்தில்
முத்தமிடும்
நாள் கிடைக்கும்..

- அரவிந்த் குமார்.பா




எனக்கு மட்டும் சொல்லிவிடு..




உனதோ எனதோ
எங்கேயடி தொலைந்தது
நமதான காதல்..

என் காதல் மட்டும்
சீனப் பெருஞ்சுவராய்
இன்னமும்..
உனது மட்டும்
எப்படியானது
பெர்லின் சுவராய்..

'உன்னை மறந்தால்
மரணம்தான் எனக்கு ' - என்று
கண் கலங்கிச் சொன்னாயே
ஒரு நாள்..

ஓ..
உதடுகளால்
எழுதியதை
கண்ணீரால்
அழித்துவிட்டாயோ..

உயிரைத்
தொட்டுத் திரும்பும்
சுவாசமெல்லாம்
உன்னையே
நினைத்துக் கொண்டிருக்கிறது
எந்நேரமும்..

என்ன
செய்து கொண்டிருக்கிறாய் நீ
இந்நேரம்..

'உன் கண்கள் பிடிக்கும் -
உன் புன்னகை பிடிக்கும் -
உன் ஆணவம் பிடிக்கும் -
உன் ஆளுமை பிடிக்கும் '
என்பாயே..

எப்படியடி
மறந்தாய்
ஒட்டு மொத்தமாய்
உன்னை மட்டுமே
பிடித்த என்னை..

என் மலர்ந்த
இதயத்தில்
எப்போதும் இருப்பவளே..

நான் கொடுத்த
பூக்களை
வாடிய பின்பும்
பத்திரப்படுத்தி
வைத்திருந்தாயே ..

இப்போது
என்ன செய்தாய்
அவற்றை..

கிடக்கட்டும்
என்று வைத்திருக்கிறாயே..
அல்லது
குப்பைக் கூடைக்கு
அனுப்பி விட்டாயா..

நீ வரும்
கனவில் இருந்து
உன் கையெழுத்து
சிரிக்கும் காகிதம் - வரை
எல்லாவற்றையும்
நினைவகத்தின்
முதலடுக்கிலேயே
செதுக்கி வைத்திருக்கிறேன்..
நான் - நம்
முதல் முத்தத்தைப்
போல..

நம்
முதல் முத்தமேனும்
ஞாபகமிருக்கிறதா
உனக்கு..

உன் பிறந்த நாளன்று
நான் பரிசளித்த
வண்ணத் துப்பட்டாவும்
பட்டாம் பூச்சிக்
கவிதையும்
போதுமே..
மறக்க மறக்க
பறைசாற்றும்
என் காதலை..

எங்கே
ஊமையாக்கி விட்டாயா
அந்த
உன்னத சின்னங்களை..

எல்லாம் சரி
கடவுளே வந்தாலும்
என் காதலை
அழிக்க முடியாது
என்றாயே..

எனக்கு மட்டும்
சொல்லிவிடு..
கடைசியாய்
உன் காதலை
வந்து அழித்தது
எந்தக் கடவுள்
என்று..

- அரவிந்த் குமார்.பா

பார்க்குமிடம் அத்தனையும்




பார்க்குமிடம் அத்தனையும்
பாவை யுந்தன்
பிம்பம் தோன்றுதடி..

பாட்டன் - பாரதி யெழுதிய
பாட்டுக்க ளெல்லாம் - உன்னைப்
பார்த்த பின்தான்
புரிந்ததடி..

ஒரு மொழி இரு விழியால்
என் உயிர் குடித்தாய்..
உலகத்தில் தனியனைப்
போலெனை உணர வைத்தாய்..

நம் நெருக்கத்தை
அதிகரித்தாய்..
தினம் உறக்கத்தில்
உலற வைத்தாய்..

தேகமெங்கும் உதிர மென
உன்னினைப்பே
ஓடுதடி..

காலைப் பனி போல் - என்னை
காதல் பனி
மூடுதடி..

கோவிலுக்குள் ளிருந்தாலும் - உன்
கோல முக
ஞாபகமே..

சாமி தனை மறந்து விட்டு - என்
ஆறறிவும்
சாயுதடி..

சாலையோரப் பெண்களை
ஓரக் கண்ணால் கூடக்
பார்ப்பதில்லை..

பொழுது
சாய்ந்த வேலைகளில்
நண்பர் களோடு
சுற்ற வில்லை..

இருக்கும்
ஒரே தீப் பழக்கம்
இரவு தாமதமாய்
உறக்கம்..

அதற்கும்
காரணமாய்
கனியமுதே - உன்
கவன்வில் கண்களே
இருக்கும்..

- அரவிந்த் குமார்.பா



Tuesday, July 27, 2010

நீ பிரிந்து போனதும்..




நீ
பிரிந்து போனதும்
எனக்கு
கவிதையெ ழுதுவதே
மறந்து போனது..

உன்
சிநேகம் தவிர்த்ததும்
என் தேசத்தில்
மேகம் பொழிவதை
நிறுத்திக் கொண்டது..

நம் பிரிதலை
நீ முன்மொழிகையில்
என் தோட்டத்து
மலர்களெல்லாம்
தற்கொலை
செய்து கொண்டன..

என்
வீடு தேடிவந்து
வண்ணத்துப் பூச்சியொன்று
வருத்தம் தெரிவித்துப்
போனது..

எங்கள்
பாச நாய்க்குட்டி
இந்த
இருதயக் கொலை குறித்து
விசாரணையில் இறங்கவாயென
வினாவியது..

சுடிதார்ப் பெண்களெல்லாம்
இப்போது எனக்கு
உன் வேடம்
தரித்தாற்போல்
தெரிகிறது..
அல்லது
உன் போல
வேடம் தரித்ததாய்த்
தெரிகிறது..

இருந்தாலும்
என் சிந்தனைகள்
உள்வாங்கும்
எல்லா அலைவரிசையிலும்
உன் ஞாபகமே
ஒளிபரப்பாகிறது
இரவும்.. பகலும்..


என்
இருதயக் கோவிலின்
கருவறை
இருட்டடைந்தே கிடக்கிறது..
அதைப் புனரமைக்க
யாரும் வரவில்லை
இன்னமும்..

- அரவிந்த் குமார்.பா

வார்த்தை தெரியவில்லை




வார்த்தை தெரியவில்லை
உன் நளினத்தைப் புகழ..

மலர் - வாசமதை
மொழியா லெப்படி எழுத..

சாரல் தொடங்கையிலே
ஒரு சுகந்தம் பரவுமே - அதைப்
போலி ருமடங்கு
உனது மௌனமே..

உன் மெல்லிய நடைய ழகை
முகில் சொல்லியபடி யலையும்..
அதுபோல்தான் - உன் புன்னகை
கண்ட பூக்களின் நிலையும்..

கடலளவு மலையளவு
பெருஞ் செல்வம் தந்தாலும்
அவை வேண்டாம் - நகமளவு
உன் ஸ்பரிசம் தருவாயா..

விழியழகு மொழியழகு
அதையெ ல்லாம் மிஞ்சி விடும்
உடையில்லா உடல ழகால்
என் தோளில் சாய்வாயா..

என் பிஞ்சுத் தங்கமே..
நான் பெற்ற சிங்கமே..

- அரவிந்த் குமார்.பா

கவித்தவம்

கவித்தவம் செய்தேன்
காதல் வரங்கொடுத்தாள்..

காதல் தவம் செய்தேன்..
கல்யாணப் பத்திரிக்கை
அனுப்பினாள்..

- அரவிந்த் குமார்.பா

என் வாழ்க்கை வளி




உயிரிலே மழையென
ஒரு கோடிப் பூக்கள்..
உன் ஓரவிழிப் பார்வையிலே
உருவான ஆற்றல்..

வெட்கப்பட்டு சிறுநேரம்
வாய் பொத்திச் சிரித்தாய்..
மாநிலமே பயனுற
மின்சாரம் கொடுத்தாய்..

கற்றைக் கூந்தல் அவிழ்த்தாய்
புவியியல் மாற்றம்..
அவசரமாய் தரையிறங்கிய
சூரியனுக்கு ஏமாற்றம்..

என் சிந்தனை
ஒரு கானகம்..
நீ அந்தரத்தில்
வானகம்..
சாரலின் கைகளில்
தீப்பொறி தருகிறாய்..
செய்யாதே
அது பெரும்பாதகம்..

என் நெஞ்சில்
வலி ஆயிரம்..
போகும் வழி
ஓரிடம்..
ஆய்வுகள் செய்து
கண்டறிந்தேன்..
என் வாழ்க்கைக்கான
வளி உன்னிடம்..

- அரவிந்த் குமார்.பா